தீருவில் தீயில் தியாக தீபங்கள்



பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப் படுகின்றது.

தமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், கொல்லும் சயனைட் வில்லையை மகிழ்வுடன் உண்டு தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள்.

இரு தளபதிகளும் மணமாகி மணமாலை வாடுமுன்பு தாய், தாரம் இரண்டையும் விட உயிரிலும் மேலான தாயக விடுதலையையும் மக்களையும் நேசித்தவர்கள் . இந்நிகழ்வு தமிழீழப் போராட்டத்தின் முக்கியமான திருப்புமுனையாகும். அத்துடன் தமிழீழ போராட்டத்திற்கு உத்வேகம் அளித்து புத்துயிர் பெறச்செய்தது .

29.07.1987 மாலை 6.15 மணிக்கு தமிழீழ தேசத்திற்கு இந்திய இராணுவத்தை ஏற்றி வந்த முதல் விமானம் தரையிறக்கப்பட்டது .

05.10.1987 பிற்பகல் 5.05 மணிக்கு பலாலி இராணுவ முகாமில் புலேந்திரன், குமரப்பா, அப்துல்லா, மிரேஸ், நளன், அன்பழகன், ஆனந்தக்குமார், ரெஜினோல்ட், பழனி, கரன், தவக்குமார், ரகு, தமீம், கருணா, கரன், தாஸ், செல்வா, சிவகுமார் ஆகிய 17 போராளிகள் சயனைட் உட்கொண்டனர் . இவர்களில் முதல் 11 பேரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.


ரகு ஆபத்தான நிலையிலிருந்து அடுத்த நாள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான் . வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலேந்திரன் மணமுடித்து இரு மாதங்கள்தான் – குமரப்பா மணமுடித்து ஒரு மாதம் – கரன் இரு குழந்தைகளின் தந்தை . உயிர் பிழைத்த ஏனைய ஐவரும் நீண்டகால சித்திரவதையின் பின் விடுவிக்கப்பட்டனர்.

03.10.1987 அன்று எமது கடற்பரப்பில் இப் பதினேழு போராளிகளும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் . இவர்கள் தமிழகத்திலிருந்து எமது அலுவலக ஆவணங்களை படகில் ஏற்றி வரும் போதே கைதாகினர்.
கைதானவர்களில் ஒருவர் புலேந்திரன் என்று தெரிந்ததும் , சிறிலங்காவின் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி துள்ளிக் குதித்தார் . சிறிலங்கா வானொலி புலேந்திரனுக்கு கொலைகாரப்பட்டம் சுமத்தி, இவ்வாறான ஒரு பயங்கர குற்றவாளியை கைது செய்துள்ளோம் என பெருமை பேசியது . ‘இவர்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டதாலேயே இவர்களைக் கைது செய்ய வேண்டியேற்பட்டது’ என்று நியாயமும் கூறியது.
இவர்கள் பலாலி இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்டனர் . இவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி , தலைவர் பிரபாகரன் இந்திய அரசிடம் தமது கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்தார் . 

இது பற்றி 05.10.1987 அன்று தமிழீழத்தில் வெளிவந்த ஈழமுரசு செய்தி இதழில் பின்வருமாறு தலைவர் தெரிவித்ததாக வெளியிடப்பட்டிருந்தது. ‘ஆயுதங்களை கையளித்த பின் எமக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போராளிகளைக் கைது செய்வதும், தடுத்து வைப்பதும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானதாகும்’.


எமது போராளிகள் இதுவரை எதுவித குற்றமும் இழைக்கவில்லை. குற்றமிளைக்காதவர்களை கைது செய்ய முடியுமா?’

ஒரு மீனவத் தொழிலாளி தனது தொழிலைச் செய்ய கடலில் செல்லும் உரிமையைப் போன்றதான செயலைத்தவிர எமது போராளிகள் வேறு எதனைச் செய்தார்கள்?

நமது பிரதேசத்துக் கடலில் நாம் சுதந்திரமாகச் செல்லக் கூடாதா ? எமது இந்தச் சுதந்திரம் பறிக்கப்படக்கூடிய ஒன்று என நாம் கருதவில்லை . வெளிநாடு செல்ல விமானத்தில் பறப்பது போன்றே கடலில் படகில் செல்வதற்கான உரிமையும் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

இது போன்றதே நடந்த சம்பவமாகும் . இந்தியாவில் உள்ள எமது தலைமைக் காரியாலயத்தை மூடிவிட்டு அங்கிருந்த தஸ்தாவேஜுகளையும் பிற ஆவணங்களையும் எடுத்து நம் பிரதேசத்திற்கு கொண்டுவர இந்திய கடற்படையிடம் பாதுகாப்பும் , அனுமதியும் கேட்டோம் . பலதடவை கேட்டோம் . ஆனால் தரப்படவில்லை . எனினும் பொருட்களை எடுத்து வருவது பற்றி இந்திய அரசுக்கு அறிவித்திருந்தோம்.


இந்நிலையில் பொருட்களை இந்தியக் கரையில் எடுத்து வைத்து விட்டு பின் அவைகளில் ஒரு பகுதியை வள்ளத்தில் கொண்டு வந்து நமது பிரதேசத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மீதிப் பொருட்களை எடுத்து வர வள்ளத்தில் சென்றபோதே கைது சம்பவம் இடம்பெற்றது.


தளபதிகள் தற்பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது . இதனையே தளபதிகள் இருவரும் கொண்டு வந்தனர் . ஆனால் சிறிலங்கா அரசின் வானொலி , தொலைதொடர்பு சாதனங்கள் , ஆயுதங்களைக் கொண்டு வந்ததாகப் பிரச்சாரம் செய்கின்றன.


ஆயுதங்களை ஒப்படைத்த பின் எமது பாதுகாப்புக்களை இந்தியப்படையிடம் ஒப்படைத்தோம் . எம்மை யாரவது கைது செய்வதை தடுக்கவேண்டியவர்கள் அவர்களே . எமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களும் அவர்களே.


தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இந்தியா எம்மை அங்கீகரித்தது . இவ்வாறு நிலைமை இருக்கும் போது சிறிலங்கா அரசு எம்மைக் கைது செய்யும் கட்டத்தில் இந்தியாவே எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமைப்பாட்டுக்குரியது . தவறின் அது ஆபத்துக்குரியதாகும்.


தலைவர் அவர்களின் வேண்டுகோளானது அலட்சியம் செயப்பட்டது . கைதானவர்களை கொழும்புக்கு கொண்டு செல்வது பற்றி இரு அரசுகளும் ஆராய்ந்தன.


இந்நிலையில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தலைவர் அவர்களால் ஒரு செய்தி அனுப்பப்பட்டது.


இச்செய்தியை இலங்கைக்கான இந்திய தூதுவரான டிக்சித்துடன் ஆலோசித்த ராஜீவ் , பின்னர் டிக்சித் ஊடாக சில நிபந்தனைகளை உள்ளடக்கிய தனது செய்தியை அறிவித்தார் . அச்செய்தியில், ‘புலிகளுடனான போரில் கைதாகி , புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட வேண்டும். ஜே . ஆர் விரும்பியவாறு இடைக்கால நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனும் நிபந்தனைகள் உட்பட்ட வேறு சில நிபந்தனைகளும் அடங்கியிருந்தன.


இவ் நியாயமற்ற நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது , தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உறுதித்தன்மையை உலகிற்கு எடுத்தியம்பியது.

‘‘இது பேரங்களிற்கு மசியாது , எனவே இதை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையேல் இந்தியாவின் பிராந்திய நலனைப் பேணமுடியாது!’’

என்ற முடிவுக்கு வந்தது இந்திய அரசு.

அதன் முதற்கட்ட பலியாக கைதான 17 விடுதலைப் புலிகளையும் தேர்ந்தெடுத்தது.

‘‘தளபதிகள் இருவரும் அண்மையிலேயே திருமணமானவர்கள் . எனவே வாழ்க்கையில் பற்றுக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இந்திய பிரதமரின் நிபந்தனைகளைக் கூறுவோம். இவர்கள் கைதிகளை விடுவிப்பதற்கு சம்மதித்தால் , அதனைப் பிரச்சாரப்படுத்துவோம்’’ எனக்கருதிய இந்திய இராணுவத்தினர் முதலில் புலேந்திரனை அணுகினர் . பிரதமர் ராஜீவின் நிபந்தனைகளை தெரிவித்தனர்.


அதற்கு புலேந்திரன், ‘‘சிறிலங்கா இராணுவத்தினர் எம்மோடு யுத்தத்தில் ஈடுபட்ட வேளையில் யுத்தக் கைதிகளாகக் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான ஒப்பந்தத்தின் பின் கைது செயப்பட்டவர்கள். எனவே இவ்விரண்டையும் ஒப்பிட முடியாது . தமிழீழ இலட்சியத்திற்காகப் போராடும் எம்மை வைத்து இடைக்கால நிர்வாக சபை குறித்துப் பேரம் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என திட்டவட்டமாகத் தெரிவித்தார் – ( ஈழமுரசு 06.10.1987).

இந்திய – சிறிலங்கா அரசுகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.
05.10.1987.

அன்று மிக விரைவாகச் சம்பவங்கள் நடந்தன . தென்பிராந்தியத் தளபதி திபேந்தர் சிங்; பின்பு இந்திய தூதர் டிக்சிற் சிறிலங்கா ஜனாதிபதியுடன் பேசுவதாகவும், விரைவில் சுமுகமான முடிவு வரும் என்றும் தெரிவித்தார்.

புலேந்திரன் தலைவருக்காக தனது இறுதிக் கடிதத்தை வரைந்தார். அதே போல் குமரப்பாவும் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார் . ஏனைய போராளிகளும் கூட்டாக தமது இறுதிக் கடிதத்தை வரைந்தனர்.

மூன்று கடிதங்களினதும் சாராம்சமும் ஒன்றுதான் . தம்மைக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றால் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர்.

விடுதலைக்கான காலக்கெடு 7:00 மணியிலிருந்து 10:00 மணியாகியது . பின்பு பிற்பகல் 2:00 மணியாகியது . ஆயினும் 2:00 மணி கடந்த பின்பும் பதினேழு வேங்கைகளும் விடுதலை செய்யப்படவில்லை.

தலைவர் குறிப்பிட்டது போல் சிங்கள இனவாதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கும் நேரம் நெருங்கியது . பிற்பகல் 5:05 மணிக்கு நாம் அவர்களை இழந்தோம். வீரச்சாவெய்தும் இறுதி மணித்துளிவரை அவர்கள் போராடினார்கள்.

சயனைட் உட்கொண்டவர்கள் , உயிர் பிரிந்த பின்னர் கூடத் தாக்கப்பட்டார்கள். புலேந்திரன் உடலில் தெரிந்த காயங்கள் இன்னொரு ‘வெலிக்கடையை’ ஞாபகப்படுத்தியது . காயத்துடன் காணப்பட்ட சடலங்களில் ரகுவினுடையதும் ஒன்று.

வல்வை – தீருவில், 07.10.1987 அன்று பன்னிரு வேங்கைகளினதும் புகழுடல்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன . இவர்களுக்கு ஆயுத பாணியாக வந்து அஞ்சலி செலுத்தினார் தலைவர் அவர்கள்.

ஒப்பந்தம் உருவாகிய சில நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த திரு பழ. நெடுமாறன் அவர்களிடம் ‘‘இந்நிலையில், தமிழீழ கோரிக்கை பற்றி ஈழத்தமிழ் மக்களின் கருத்தென்ன ?” என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள் . அதற்கு அவர் ‘‘அது அணைந்துவிடவில்லை – நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றது அது எப்போதும் பற்றிக் கொள்ளலாம்” என்றார்.

ஆம் , நீறு பறந்தது ! நெருப்பு பற்றிக் கொண்டது.

தமது பிள்ளைகளுக்கான இறுதிக் கடன்களைச் செய்வதற்காக நாற்காலிகளில் வரிசையாக இருத்தப்பட்ட பன்னிரு வேங்கைகளினதும் பெற்றோர்களைப் பார்க்கையில் எமது மக்களின் வயிற்றில் பற்றியெரிந்த நெருப்பு – நான்கு அடி உயரமான சிதையில் பன்னிரண்டு மாவீரர்களையும் வரிசையாக அடுக்கி வைத்து மூட்டிய பெரு நெருப்பு – திரு. நெடுமாறனின் கூற்றை நிரூபித்தது.

நன்றி : ”தீருவில் தீ ”
வெளியீடு மாவீரர் பணிமனை – 1992

தீயினில் எரியாத
தீபங்களே !
எம் தேசத்தில்
நிலையான வேதங்களே!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Labels: ,



Leave A Comment:

Powered by Blogger.