ரெமோ திரை விமர்சனம்

Starring
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ்
Direction
பாக்கியராஜ் கண்ணன்
Music
அனிருத் ரவிச்சந்தர்

சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவு. ஆனால், அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமைவதில்லை.  கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு ஹீரோ தேர்வு செய்வதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார்.

முதலில் காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிக்கச் சொல்கிறார். ஆனால், அவருக்கோ ரொமான்ஸ் சுத்தமாக வருவதில்லை. இதனால், கே.எஸ்.ரவிக்குமார் சிவகார்த்திகேயனை நிராகரிக்கிறார். 

இருப்பினும், அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை உணர்ந்து தான் அடுத்ததாக எடுக்கும் ‘அவ்வை சண்முகி’ படத்தை பற்றி அவரிடம் சொல்கிறார். அந்த படத்தில் ஹீரோ லேடி கெட்டப்பில் நடிப்பதாகவும் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்த படத்திலாவது வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நினைக்கிறார். 

கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துவிட்டு திரும்பிவரும் வேளையில் கீர்த்தி சுரேஷை பார்க்கும் சிவகார்த்திகேயனுக்குள் கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட காதல், ரொமான்ஸ் எல்லாம் துளிர்விடுகிறது. எனவே, அவளை எப்படியாவது காதலிக்க வைக்கவேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார்.

ஒருகட்டத்தில், கீர்த்தி சுரேஷை தேடி அவள் வீடு வரைக்கும் போகும் சிவகார்த்திகேயன், அங்கு கீர்த்தி சுரேஷுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். 

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் சென்று கே.எஸ்.ரவிக்குமாரை கவர நினைக்கிறார். உடனே லேடி கெட்டப் போட்டு சென்று அவரிடம் சென்று நடித்துக்காட்டுகிறார். அப்படியும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு பிடிப்பதில்லை. இதனால், சோகத்தில் லேடி கெட்டப்பில் பஸ்ஸில் திரும்பும் சிவகார்த்திகேயனை யோகிபாபு சில்மிஷம் செய்கிறார். 

இதைப் பார்க்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனை லேடி என்று நினைத்து யோகி பாபுவிடமிருந்து காப்பாற்றுகிறாள். அவர் நர்ஸ் கெட்டப்பில் இருப்பதை பார்த்து தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறுகிறார். இது தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதி, அந்த கெட்டப்பிலேயே இருந்து அவள் மனதை மாற்றி திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கிறார்.
இறுதியில், சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் இருந்து கீர்த்தி சுரேஷின் மனதை மாற்றி காதலில் ஒன்று சேர்ந்தாரா? சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா? என்பதே மீதிக்கதை. 

சிவகார்த்திகேயன் சாதாரணமாகவும் லேடி கெட்ப்பிலும் அசத்தலாகவும் அழகாகவும் இருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் நர்ஸாக நடை, உடை, பாவனை எல்லாம் நன்றாக செய்திருக்கிறார்.

அதேபோல், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சியிலும் சிவகார்த்திகேயன் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சிகளில் ரசிகர்களின் கிளாப்ஸ் தியேட்டரை அதிர வைக்கிறது. 

கீர்த்தி சுரேஷ் இதுவரையிலான படங்களில் ரொம்பவும் அழகாக இருந்தார். இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் கெமிஸ்டரி ஏற்கெனவே ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில், இந்த படத்திலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் துருதுரு நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.


சதீஷின் காமெடி படத்திற்கு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் காதலுக்கு பச்சை கொடி காட்டும் அம்மாவாக நடித்து அசத்தியிருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரின் காமெடியும் பரவாயில்லை. கீர்த்திசுரேஷின் அப்பாவாக வரும் நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். 


இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரை மட்டுமே முன்னிருத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கவில்லை.

அதேபோல் படத்தில் நிறைய லாஜிக் மீறல்களும் இருக்கிறது. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்த வாய்ப்பில் பாதியளவாவது மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அதேபோல், படத்தில் உள்ள லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம். 

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் தனது கலைக் கண்ணால் வண்ணமயமாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

ரசூல் பூக்குட்டி, சிவகார்த்திகேயனின் குரலை அழகான பெண் குரலாக மிகவும் நேர்த்தியாக மாற்றியிருக்கிறார். முத்துராஜின் அரங்குகள் அருமையாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. 

மொத்தத்தில் ‘ரெமோ’ ஜொலிக்கிறான்.



Tags:remo,sivakarthikeyan,keerthy suresh,sathish,Remo movie review,remo movie,remo move hd,hd tamil movie,tamil movie ,remo tamil movie




Labels: ,



Leave A Comment:

Powered by Blogger.