சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரவு 11.30 மணியளவில் முதல்வர் உயிரிழந்ததாக மருத்துவமனையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது. முதல்வர் உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டதால் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர்.
அவர், எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில் அவருக்கு ஞாயிற்றுக்கு மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் கட்சியினர் கவலையில் ஆழ்ந்தனர். அப்பல்லோ மருத்துவமனை முன்பு விடிய விடிய காத்து நின்ற தொண்டர்கள், முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். அதேசமயம் மருத்துவமனை மட்டுமின்றி சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலையங்களில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் விடுப்பு எதுவும் எடுக்காமல் காலையில் பணிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அவசரமாக கூடி ஆலோனை நடத்தினர். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று பிற்பகல் வெளியிட்ட புதிய செய்திக்குறிப்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்தது. இதனால், அப்பல்லோ வாசலில் கூடி இருக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அக்கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அதேசமயம், முதல்வருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே வெளியிட்ட அறிக்கையிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.
எனவே, தொண்டர்களிடையே உள்ள கவலை மேலும் மேலும், உலகின் மிக உயர்ந்த உயிர் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று மாலை 5.15 மணியளவில் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திகள் தவறானவை என்றும் தொடர்ந்து முதல்வருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மறுப்பு செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரவு 11.30 மணியளவில் முதல்வர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயம் செயலிழந்ததால் முதல்வர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Labels: NEWS