பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவினர் சென்னை நோக்கி விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீர் சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்து விட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கூடிய அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி கண்ணீர் மல்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்த பிற மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். எனவே, அசம்பாவிதங்களை தடுக்க அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அறிந்து தூத்துக்குடியில் இருந்து உடனடியாக சென்னை திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
|
Labels: NEWS